'ஹீரோ' ஆவாரா ரோகித்: முதல் டெஸ்ட் துவக்கம்

Indian News

Indian News

Author 2019-10-02 05:17:28

img

விசாகப்பட்டனம்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் துவங்குகிறது. இதில், துவக்க வீரராக ரோகித் சர்மா முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது.

இந்திய அணிக்கு மயங்க் அகர்வாலுடன் இணைந்து ரோகித் சர்மா துவக்கம் தர உள்ளார். விண்டீஸ் தொடரில் ஏமாற்றிய அகர்வால் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டை சதம், சமீபத்திய உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட 8,686 ரன்கள் குவித்தவர் ரோகித் சர்மா.

டெஸ்டில் 'மிடில் ஆர்டரில்' அறிமுகம் ஆகி 1,585 ரன்கள் (27 போட்டி) தான் எடுத்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதன் முறையாக துவக்கம் தர உள்ளார்.

புஜாரா பலமா

ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் கரீபிய மண்ணில் சொதப்பினார் டெஸ்ட் 'ஸ்பெஷலிஸ்ட்' புஜாரா. சொந்தமண்ணில் இவர் எழுச்சி பெற காத்திருக்கிறார். நான்காவது இடத்தில் கேப்டன் கோஹ்லி சாதிப்பார் என நம்பலாம். அடுத்து வரும் ரகானே தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் இரு சதம் (127, 100, டில்லி, 2015) அடித்த ஒரே இந்திய வீரராக உள்ளார். இவருடன் விஹாரியும் சேர்ந்து மீண்டும் மிரட்டலாம்.

சகா வருகை

கடந்த 2018 தென் ஆப்ரிக்க மண்ணில் தோளில் காயமடைந்து திரும்பினார் விக்கெட் கீப்பர் சகா. 22 மாதங்கள் போராட்டத்துக்குப் பின் முதல் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மூன்று வித கிரிக்கெட்டிலும் இடம் பெற்றிருந்த இளம் ரிஷாப் பன்டுக்கு இது பின்னடைவு தான்.

பவுலிங் எப்படி

காயம் காரணமாக பும்ரா விளையாடாத நிலையில், முகமது ஷமியுடன், இஷாந்த் சர்மா களம் காண்கிறார். 'சுழலில்' நீண்ட இடைவெளிக்குப் பின் அஷ்வின், ஜடேஜா கூட்டணி கைகோர்க்கிறது.

இளம் படை

தென் ஆப்ரிக்க அணி டிவிலியர்ஸ், ஆம்லா என அனுபவ வீரர்கள் இல்லாமல் வந்துள்ளது. நான்கு ஆண்டுக்கு முன் இந்தியா வந்த அணியில் இடம் பிடித்த டுபிளசி உள்ளிட்ட 4 பேர் மட்டும் தற்போது அணியில் உள்ளனர். பயிற்சி போட்டியில் மார்க்ரம் சதம் அடித்தது நம்பிக்கை தரலாம்.

எல்கர், பவுமா, புருய்ன், 'டுவென்டி-20' தொடரில் மிரட்டிய குயின்டன் டி கான் என இளம் படை பலம் சேர்க்கும் எனத் தெரிகிறது.

பவுலிங்கில் ரபாடா, பிலாண்டர், லுங்கிடி கூட்டணி 'வேகத்தில்' மிரட்டலாம். 'சுழலில்' அசத்த கேஷவ் மஹராஜ் உள்ளார்.

11 பேர்

முதல் டெஸ்டில் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர், 4 பவுலர்கள் என களமிறங்குகிறது. இதன் படி கோஹ்லி, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, சகா, அஷ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி விளையாட உள்ளனர்.

அஷ்வின் வாய்ப்பு

கடந்த ஆண்டு அடிலெய்டு டெஸ்டில் (ஆஸி., டிச. 6-10) பங்கேற்றார் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தின் அஷ்வின். இதன் பின் சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. தற்போது 9 மாதத்துக்குப் பின் இன்று இந்திய அணியில் விளையாடுகிறார்.

6

இந்திய மண்ணில் தென் ஆப்ரிக்கா 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது. இதில் இந்திய அணி மூன்று முறை (1996-97ல் 2-1, 2004-05ல் 1-0, 2015-16ல் 3-0) கோப்பை வென்றது. தென் ஆப்ரிக்கா 1999-2000ல் 2-0 என சாதித்தது. இரு தொடர்கள் 1-1 'டிரா' (2007-08, 2009-2010) ஆகின.

11

கடந்த 1992 முதல் இரு அணிகளும் 36 டெஸ்டில் மோதின. இந்தியா 11ல் வென்றது. 10 போட்டி 'டிரா' ஆக, தென் ஆப்ரிக்கா 15ல் வெற்றி பெற்றது.

* சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மோதிய 17 டெஸ்டில், 8ல் இந்தியா வென்றது. 4 போட்டி 'டிரா' ஆனது. 5ல் தென் ஆப்ரிக்கா வென்றது.

ராசியான மைதானம்

விசாகப்பட்டனம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் (2016) நடந்தது. இங்கிலாந்துக்கு (255, 158) எதிரான இப்போட்டியில் இந்திய அணி (455, 204) 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* புஜாரா 119, 1, கோஹ்லி 167, 81 ரன்கள் விளாசினர்.

* சுழலில் அசத்திய அஷ்வின் (5+3) மொத்தம் 8 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு உதவினார்.

மழை வருமா

விசாகப்பட்டனத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பொழிகிறது. முதல் நாளில் மழை வர 80 சதவீத வாய்ப்புள்ளது. அடுத்த இரு நாட்களுக்கும் (50, 40 சதவீதம்) மழை தொடரலாம். கடைசி இரு நாளிலும் பாதிக்க வாய்ப்புள்ளதால் போட்டி முழுமையாக நடப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆடுகளம் எப்படி

அடுத்தடுத்து மழை பொழிவதால் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகம் காணப்படும். இது வேகங்களுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. அதேநேரம் ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், 'சுழல்' வீரர்களுக்கு கொண்டாட்டம்.

கோஹ்லி நம்பிக்கை

கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''ஒருநாள் அரங்கில் ரோகித் முதலில் 'மிடில் ஆர்டரில்' களமிறங்கினார். பிறகு துவக்க வீரராகி ஜொலித்தார். இதேபோல தற்போது டெஸ்டில் துவக்கத்தில் சிறப்பாக விளையாடத் துவங்கினால், இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பாக இருக்கும். சேவக் போல, ரோகித் சர்மா வழக்கமான ஸ்டைலில் விளையாடி போட்டியை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன். இதற்கான திறமை இவருக்கு உள்ளது,'' என்றார்.

120

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் தரப்படும். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு டெஸ்டில் வென்றால் 40 புள்ளிகள் கிடைக்கும். 'டிரா' ஆனால் தலா 20 புள்ளிகள் தரப்படும். போட்டி 'டை' ஆனால் இரு அணிக்கும் 13 புள்ளிகள் கிடைக்கும்.

இப்போதுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா (120), நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (56), இங்கிலாந்து (56) அணிகள் 'டாப்-5' ஆக உள்ளன.

சிறந்த விக்கெட் கீப்பர்

சகா குறித்து கோஹ்லி கூறுகையில்,''வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சகா சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயத்தால் விளையாட முடியாமல் போனது துரதிருஷ்டம். என்னைப் பொறுத்தவரையில் சகா தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்,'' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN