இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

Indian News

Indian News

Author 2019-10-01 02:49:40

img

விசாகப்பட்டினம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நாளை காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கும் ரோகித் ஷர்மா கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட்டானதால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் வென்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் வென்றால் புதிய சாதனை படைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2013ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதில்லை என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவும் கோஹ்லி & கோ முனைப்புடன் உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா காயம் காரணமாக விலகியுள்ளது சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும் ஷமி, இஷாந்த், உமேஷ் கூட்டணி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு சாஹா, பன்ட் இடையே போட்டி நிலவுகிறது. சுழலுக்கு அஷ்வின், குல்தீப், ஜடேஜா பொறுப்பேற்கின்றனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமையும். அதே சமயம் டு பிளெஸ்ஸி தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. ஹாஷிம் அம்லா, டேல் ஸ்டெயின் ஓய்வு பெற்ற பிறகு தென் ஆப்ரிக்கா சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), மயாங்க் அகர்வால், ரோகித் ஷர்மா, செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், விருத்திமான் சாஹா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, ஷுப்மான் கில்.
தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா, தியூனிஸ் டி புருயின், குவின்டான் டி காக், டீன் எல்கர், ஸுபேர் ஹம்ஸா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், செனூரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெர்னான் பிலேண்டர், டேன் பியட், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN