இந்திய பெண்கள் அசத்தல் * தொடரை வென்று அபாரம்

Indian News

Indian News

Author 2019-10-02 15:40:22

img

சூரத்: நான்காவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த இரு போட்டிகள் மழையால் ரத்தாகின. நான்காவது போட்டி சூரத்தில் நடந்தது.

மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதம் ஆக, தலா 17 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.

ஷபாலி விளாசல்

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தானா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.

மந்தனா ஒரு பக்கம் மந்தமாக விளையாட, ஷபாலி ரசிகர்களை சபாஷ் போட வைத்தார். 5 ரன்னில் தப்பிப் பிழைத்த ஷபாலி, பவுண்டரிகளாக விளாசினார்.

19 பந்தில் 13 ரன் எடுத்து மந்தனா வெளியேறினார். லஸ் ஓவரில் பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து அடித்த ஷபாலி, 33 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். வந்த வேகத்தில் டி கிளர்க் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (16) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் ரோட்ரிக்ஸ், தீப்தி இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்தனர்.

ரோட்ரிக்ஸ் 33 ரன்கள் எடுத்து திரும்பினார். இந்திய அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. பூஜா (5), தீப்தி சர்மா (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. லீ (9) ரன் அவுட்டாக, லாரா (23), தஜிம் (20) சற்று கைகொடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. தென் ஆப்ரிக்க அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்தியா சார்பில் பூனம் யாதவ் 3, ராதா 2 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

46

இந்திய அணி வீராங்கனை ஷபாலி வர்மா 15. நேற்று தனது இரண்டாவது போட்டியில் பங்கேற்ற இவர் 33 பந்தில் 46 ரன்கள் விளாசினார். இதையடுத்து சர்வதேச பெண்கள் 'டுவென்டி-20' அரங்கில் 16 வயதுக்கு முன் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராங்கனை ஆனார். முதலிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின் கவிஷ்கா (57, எதிர்-மலேசியா) உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN