இந்திய பெண்கள் பரிதாபம்: ஒரு ரன்னில் தோல்வி
ஆன்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஐ.சி.சி., பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
விண்டீஸ் அணிக்கு ஸ்டாசி (12), காம்ப்பெல்லா (0) ஏமாற்றினர். நடாசா (51) அரை சதம் விளாசினார். கேப்டன் ஸ்டாபானியே டெய்லர் (94) சத வாய்ப்பை இழந்தார். ஜுலன் 'வேகத்தில்' செடீன் (43) சிக்கினார். விண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது.
பிரியா அபாரம்
பின், களமிறங்கிய இந்திய அணிக்கு பிரியா புனியா, ஜெமிமா ஜோடி அபார துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தபோது, ஜெமிமா (41) அவுட்டானார். புனியா (75) அரை சதம் விளாசினார். பூனம் ராத் (22), கேப்டன் மிதாலி (20) நிலைக்கவில்லை. அனிசா 'சுழலில்' தீப்தி சர்மா (19) சிக்கினார். அனிசா வீசிய கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் ஏக்தா பிஷத் டக் அவுட்டானார். கடைசி பந்தில் பூனம் யாதவ் (0) சிக்க, இந்திய அணி 50 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. விண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அனிசா 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டி நவம்பர் 3ல் இதே மைதானத்தில் நடக்கவுள்ளது.
ஒற்றை கை 'கேட்ச்'
இந்தியாவின் ஏக்தா வீசிய பந்தை விண்டீஸ் கேப்டன் ஸ்டாபானியே துாக்கி அடித்தார். சிக்சருக்கு செல்லும் என்ற நிலையில், பவுண்டரி எல்லையில் இருந்த ஹர்மன்பிரீத் துடிப்பாக செயல்பட்டார். அந்தரத்தில் தாவிய இவர், ஒற்றை கையால் 'கேட்ச்' செய்து அசத்தினார். ஸ்டாபானியே 94 ரன்களில் திரும்பினார்.