எங்கே செல்லும் தோனி பாதை... * வங்கதேச தொடரிலும் 'ரெஸ்ட்'

Indian News

Indian News

Author 2019-09-25 02:17:19

img

புதுடில்லி: இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர் உள்ளிட்ட ஒருசிலர் தான் சரியான நேரத்தில் ஓய்வு பெற்றனர். கபில்தேவ், சச்சின் உள்ளிட்டோர் சாதனைக்காக தொடர்ந்து விளையாடினர். இதில் தோனி எந்த பாதையில் செல்லப் போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் 70. கடந்த 1987ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் (பெங்களூரு) 2வது இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து நல்ல 'பார்மில்' இருந்த போது, திடீரென ஓய்வு அறிவித்தார். அப்போது 37 வயதான கவாஸ்கர் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடலாமே என்றனர்.

இதேபோல விஜய் மெர்ச்சன்ட் திடீரென ஓய்வு பெற்றார்.

* கபில்தேவ், பந்துவீச்சின் வேகம் குறைந்த போதும், சாதனைக்காக அணியில் நீடித்தார்.

* அப்போதைய கேப்டன் தோனி 'அட்வைஸ்' படி கங்குலி, டிராவிட் ஒருநாள் அணியில் கழற்றி விடப்பட்டனர்.

* தேர்வுக்குழு சொல்லும் முன் கங்குலி, டெஸ்டில் ஓய்வு அறிவித்தார்.

* டிராவிட் பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் என தேர்வுக்குழு அறிவித்தது. பின் டெஸ்டில் அவராகவே கிளம்பினார்.

* சச்சின் ஓய்வு சற்று வித்தியாசமானது. சிறப்பாக விளையாடிய போதும், இளரத்தம் வேண்டும் என தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டதால் 2012ல் ஒருநாள் அரங்கில் இருந்து முதலில் விலகினார். டெஸ்டில் 2013 கடைசி வரை தொடர்ந்தார்.

* சேவக், காம்பிர் இருவரும் ஓய்வு அறிவிக்க தாமதம் செய்ய, நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டது.

இந்த வரிசையில் தற்போது 'சீனியர்' விக்கெட் கீப்பர் தோனி 38, நிலை உள்ளது. 2014 கடைசியில் டெஸ்டில் ஓய்வு பெற்றார். கடைசியாக உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) ஜூலை 10ம் தேதி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பங்கேற்றார்.

திடீர் விலகல்

பின் விண்டீஸ் தொடரில் இருந்து தற்காலிக 'ரெய்ட்' எடுத்த தோனி, இந்திய ராணுவத்தில் சேவை செய்தார். தென் ஆப்ரிக்கா தொடரை அடுத்து இன்று துவங்கும் விஜய் ஹசாரே டிராபி, பின் வங்கதேச தொடரிலும் (வரும் நவ. 3 முதல் 26 வரை, மூன்று 'டுவென்டி-20', இரண்டு டெஸ்ட்) தோனி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து கவாஸ்கர் சமீபத்தில் கூறுகையில்,''வேறு யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளும் முன் தோனி ஓய்வு பெறுவது நல்லது,'' என்றார்.

இதனால் கவாஸ்கர் வழியில் ஏன் ஓய்வு பெற்றார் என ரசிகர்களை தோனி ஏங்க வைத்துச் செல்வாரா அல்லது கபில் தேவ் போல, எப்போது ஓய்வு பெறுவார் என்ற நிலைக்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காரணம் ஏன்

ஒரு வீரர் 10 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்குகிறார். 20 வயதில் அறிமுகம் ஆகி, 35 வயது வரை விளையாடுகிறார். இந்த 25 ஆண்டுகளில் நல்ல வருமானம் கிடைத்து, உயர்ந்த நிலையில் இருப்பார். திடீரென அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் போகும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் ஒய்வு முடிவெடுக்க தடுமாறுவதாக தெரிகிறது.

இது சகஜம் தான்

ஓய்வு பெற்ற இந்திய வீரர் ஒருவர் கூறுகையில்,''எல்லோரும் சச்சின் போல மைதானத்தில் ஓய்வு அறிவிக்கத் தான் விரும்புவர். யாரும் சப்தமில்லாமல் விடைபெற விரும்ப மாட்டர். இது சகஜம் தான்,'' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN