எதிரணியை ஆட்டம் காண வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

Indian News

Indian News

Author 2019-10-24 03:27:00

img

டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது.
வலிமையான தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த முறை அதிர்ச்சி வைத்தியம் அளித்தது இந்தியா. அதற்கு முக்கியப் பங்களித்தது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று கூறினால் அது மிகையல்ல.
மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்காவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது நமது பந்துவீச்சாளர்கள்தான் என்பதால் பந்துவீச்சில் எந்த அளவுக்கு நமது வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர் என்பது புலப்படுகிறது.
இந்தத் தொடரில் சுழற்பந்து, வேகப்பந்து இரண்டிலுமே இந்திய பந்துவீச்சாளர்கள் ஜொலித்தனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா ஆகியோர் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அஸ்வின் 3 டெஸ்ட் ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளையும், ஜடேஜா 13 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ப்ரூயன் விக்கெட்டை வீழ்த்தியபோது 66 டெஸ்ட் ஆட்டங்களில் 350 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரனுடன் பகிர்ந்துகொண்டார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்.
இரண்டாவது டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த 4-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்தப் பட்டியலில் அனில் கும்ப்ளே, ஜே.ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்தில் அணியில் சேர்க்கப்படாத அஸ்வின், இந்த டெஸ்டில் தனது அனுபவத்தையும், விக்கெட் வீழ்த்தும் திறமையையும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஆல்-ரவுண்டர் ஜடேஜா, சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தி, 47 டெஸ்ட் ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இலங்கை வீரர் ரங்கனா ஹெராத், இதற்கு முன்பு இதைச் செய்திருந்தார்.
இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிக்கு பங்களித்ததில், சுழற்பந்து வீச்சாளர்கள் அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங்கின் இணையையும் விஞ்சிவிட்டது அஸ்வின்-ஜடேஜா கூட்டணி.
கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் 54 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். அதில், 21 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. அஸ்வின், ஜடேஜா இணைந்து விளையாடிய 33 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணி 25 வெற்றிகளை ருசித்துள்ளது.
எதிரணிக்கு அதிர்ச்சி அளித்த ஷமி-உமேஷ் கூட்டணி
சொந்த மண்ணில் வேகப்பந்து வீச்சில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஷமி - உமேஷ் கூட்டணி. மொத்தமாக இருவரும் 24 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமா, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இவர்கள் வீசிய ஓவர்கள் அனைத்துமே பூகம்பத்தை எதிர்கொண்டது போல்தான் இருந்திருக்கும்.
முதல் டெஸ்டில் ஷமி பந்துவீச்சில் 4 வீரர்கள் க்ளீன் போல்டாகி
வெளியேறினர். இதேபோல் உமேஷ் யாதவின் பந்துவீச்சிலும் போல்ட் மற்றும் எல்பிடபிள்யூ விக்கெட் அதிகம் கிடைத்தது.
பேட்ஸ்மேன்களின் கணிப்பைத் தவிடுபொடியாக்கி சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினால் மட்டுமே இதுபோன்ற விக்கெட்டுகளை கவர்வது சாத்தியம். இந்திய மைதானங்கள் வேகப்பந்து வீச்சைக் காட்டிலும் சுழற்பந்து வீச்சுக்கே அதிக சாதகமாக இருக்கும். இருப்பினும், வேகப்பந்து வீச்சிலும் நாம் சளைத்தவர்களல்ல என்பதை முகமது ஷமி-உமேஷ் கூட்டணி நிரூபித்து விட்டது.
கடைசி டெஸ்டில் உமேஷ் வீசிய பந்து டீன் எல்கரின் தலையை பதம் பார்த்தது. நல்ல வேளையாக அவர் தலைகவசம் அணிந்திருந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், அதிர்ச்சியில் நிலைகுலைந்த எல்கர், அதன் பிறகு விளையாட முடியாமல் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். உமேஷ் யாதவ் வீசிய பந்தின் வேகத்தை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
பந்து வீச்சில் இரு வீரர்களும் சில சிறப்பான உத்திகளைக் கையாண்டதன் மூலம், பந்து வருவதை எதிரணி வீரர்கள் கணித்து ஆடமுடியாமல் செய்துள்ளனர் (இவர்களின் பந்து வீச்சு எதிர்கால இந்திய இளம் பந்துவீச்சாளர்களுக்கு பாடமாக இருக்கும்).
எதிரணி பேட்ஸ்மேன்களை நமது வேகப்பந்து வீச்சாளர்களின் டியூனுக்கு இனி நடனமாட வைக்க முடியும் என்று வெற்றிக்கு பிறகு ஷமி கூறியது என்னவோ உண்மையாகவேத் தெரிகிறது.தென்னாப்பிரிக்க வீரர்களை நமது வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த முறை ஆட்டம் காண வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டனர்.
வேகப்பந்து வீச்சிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது இந்திய அணி!

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN