ஐஎஸ்எல் கால்பந்து தொடர் சென்னைக்கு முதல் புள்ளி

Indian News

Indian News

Author 2019-10-29 03:06:26

img

சென்னை: மும்பை சிட்டி எப்சி அணியுடனான லீக் ஆட்டத்தில் டிரா செய்த சென்னையின் எப்சி அணி புள்ளிக் கணக்கை தொடங்கியது.ஐஎஸ்எல் கால்பந்து நடப்பு சீசனின் 8வது லீக் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் உள்ளூர் அணியான சென்னையின் எப்சி அணியுடன் மும்பை சிட்டி எப்சி மோதியது.முதல் போட்டியில் கோவா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்ததால் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்று சென்னை அணி வேகம் காட்டியது. அதே சமயம், கேரளா பிளேஸ்டர்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அதே உற்சாகத்துடன் மும்பை அணி களம் கண்டது. டாஸ் வென்ற சென்னையின் அணியில் தடுப்பு ஆட்டக்காரர் ஜெர்ரி லால்ரின்சுலாவுக்கு பதில் தொன்டன்பா சிங் களம் கண்டார்.

ஆட்டம் தொடங்கியது முதல் பந்தை துல்லியமாக கடத்துவதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே பெரிய வித்தியாசமில்லை. ஒரே அளவில் வேகம் காட்டின. ஆனால் பந்து பெரும்பாலும் மும்பையிடம்தான் இருந்தது. இரு அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலனில்லை.

இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. பின்னர் மும்பை வீரர்கள் முரட்டுத்தனமாக விளையாடத் தொடங்கியதால் அந்த அணியின் 5 பேர் 6 மஞ்சள் அட்டை பெற்றனர். மும்பை வீரர் சக்கரவர்த்தி 2வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது ஆட்டத்தின் கடைசி நிமிடம் என்பதால் மும்பை அணிக்கு பாதிப்பில்லை. மும்பை வீரர்கள் 2 முறைதான் கோல் பகுதியை நோக்கி பந்தை அடித்தனர். ஆனால் சென்னை அணிக்கு 7 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் பலனில்லாமல் போனது. கடைசி நிமிடம் வரை இதே நிலைமை நீடிக்க ஆட்டம் 0-0 என சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி சென்னையில் நாளை நடைபெறும்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD