கோல்கட்டாவில் ஐ.பி.எல்., ஏலம்
கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரின் வீரர்களுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் முதன் முறையாக கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் 13வது சீசன், வரும் 2020 ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் பொதுவாக பெங்களூருவில் நடக்கும். தற்போது முதன் முறையாக கோல்கட்டாவில் வரும் டிசம்பர் 19ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., தொடரில் களமிறங்கும் கோல்கட்டா அணியின் சொந்த மண்ணாக இது உள்ளது.
ஐ.பி.எல்., கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,''வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏலம் முதன் முறையாக கோல்கட்டாவுக்கு மாற்றப்படுகிறது,'' என்றார்.
சிறிய மாற்றம்
இம்முறை குறைந்த எண்ணிக்கையில் மட்டும் வீரர்கள் வாங்கப்படலாம்.
இந்த ஆண்டு ஏலத்துக்கு மொத்தம் ரூ. 85 கோடி வரை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஏலத்தில் மீதம் வைத்துள்ள தொகையுடன், கூடுதலாக ரூ. 3 கோடி சேர்த்துக் கொள்ளலாம். இதன்படி, டில்லி அணி அதிகபட்சம் ரூ. 8.2 கோடி ஏலத்தில் பயன்படுத்தலாம். சென்னை அணிக்கு ரூ. 3.2 கோடி மீதம் உள்ளது.