கோஹ்லிக்கு சுமையா...ரோகித்திற்கு சுகமா

Indian News

Indian News

Author 2019-09-28 00:40:33

img

புதுடில்லி: ''மூன்றுவித அணிகளுக்கும் கேப்டனாக இருப்பதை விராத் கோஹ்லி சுமையாக எண்ணினால், 'டுவென்டி-20' கேப்டனாக ரோகித்தை நியமிக்கலாம்,'' என, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 30. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போல, இந்திய அணிக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்கலாம் என வலியுறுத்தப்படுகிறது. மும்பை ஐ.பி.எல்., அணிக்கு 4 கோப்பை வென்று தந்துள்ள ரோகித், 'டுவென்டி-20' அணியை வழிநடத்த வேண்டும் என கருத்து எழுந்துள்ளது.

இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில்,'' சில ஆண்டுகளுக்கு முன், டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் மட்டும் அதிகமாக நடத்தப்பட்டன.

தற்போது, 'டுவென்டி-20'யுடன் சேர்த்து, மூன்றுவித போட்டிகள் நடக்கின்றன. விராத் கோஹ்லி அதிகமான சுமை இருப்பதாக எண்ணினால், 'டுவென்டி-20' கேப்டனாக ரோகித்தை நியமிக்கலாம். கோஹ்லி எந்தளவுக்கு சுமையை ஏற்றுக்கொள்வார் என எனக்குத்தெரியாது. இது குறித்து நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அனுபவம் இல்லை

இங்கிலாந்து மண்ணில் நடந்த உலக கோப்பையில் இந்திய அணி சார்பில் நான்காவது இடத்தில், அதிகபட்சமாக 48 ரன்கள்தான் எடுக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த, 'நம்பர்-4' வரிசையில், எந்த வீரரை இறக்க வேண்டும் என கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழுவினர் தீர்க்கமான முடிவு எடுத்திருக்க வேண்டும். விஜய் சங்கர், ரிஷாப் போன்ற இளம் வீரர்களுக்கு பதில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கை அந்த இடத்தில் விளையாட அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், இவருக்கு தொடரின் கடைசி கட்டத்தில் மட்டும்தான் வாய்ப்பு தந்தனர். ஒரு வீரரிடம் இருந்து சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்த்தால், அவருக்கு அணியில் நிரந்தர இடம் தர வேண்டும். அணியில் நீடிக்க முடியுமா என்ற சந்தேகத்துடன் எந்தவொரு வீரராலும் ஜொலிக்க முடியாது. இந்த காரணத்தால்தான், இந்திய அணியால் உலக கோப்பை வெல்ல முடியவில்லை.

ஆதரவு இல்லை

கடந்த 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின், திடீரென அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டேன். இதற்கு முன், விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தேன். 36 வயதில் 'யோ யோ' உடற்தகுதியில் தேர்ச்சி பெறுமாறு வற்புறுத்தினர். பின், உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுப்பினர். அணி நிர்வாகம் போதிய ஆதரவு தந்திருந்தால், 2011, போல மீண்டும் ஒரு உலக கோப்பையில் பங்கேற்றிருப்பேன். இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN