சதம் விளாசினார் மயங்க் அகர்வால்: புஜாரா, கோஹ்லி அரைசதம்

Indian News

Indian News

Author 2019-10-11 03:41:06

img

புனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசி அசத்தினார் இந்திய அணியின் மயங்க் அகர்வால். புஜாரா, கேப்டன் கோஹ்லி அரைசதம் அடிக்க, முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நேற்று புனேயில் துவங்கியது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்க அணியில் பீட் நீக்கப்பட்டு ஆன்ரிச் நார்ட்ஜே அறிமுக வாய்ப்பு பெற்றார்.

ரோகித் ஏமாற்றம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆடுகளம் துவக்கத்தில் 'வேகங்களுக்கு' கைகொடுத்தது. வாய்ப்பை பயன்படுத்திய ரபாடா, கடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவை (14) விரைவில் வெளியேற்றினார். டெஸ்ட் அரங்கில் ரபாடாவிடம் ரோகித் அவுட்டானது 4வது முறையாக நடந்தது.

புஜாரா அரைசதம்

பின் மயங்க், புஜாரா இணைந்தனர். நார்ட்ஜே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் மயங்க். இவருக்கு கைகொடுத்த புஜாரா, மஹராஜா பந்துகளை அவ்வப்போது பவுண்டரிக்கு விரட்டினார். முத்துச்சாமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் 22வது அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த போது, ரபாடா 'வேகத்தில்' புஜாரா (58) அவுட்டாகினார்.

மயங்க் கலக்கல்

சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த மயங்க், மஹராஜ் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். பிலாண்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதம் எட்டினார். இவர் 108 ரன் எடுத்து அவுட்டாகினார்.

அடுத்து கோஹ்லி, ரகானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோஹ்லி டெஸ்ட் அரங்கில் 23வது அரைசதம் எட்டினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (63), ரகானே (18) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா மட்டும் 3 விக்கெட் வீழ்த்தினார்.

1

இந்திய மண்ணில் களமிறங்கிய முதல் இரு டெஸ்டில், இரட்டைசதம் (215), அடுத்து சதம் (108) என விளாசிய முதல் வீரர் ஆனார் மயங்க் அகர்வால்.

4

தற்போதைய தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் மயங்க் அகர்வால் 215, ரோகித் சர்மா 176, 127, தற்போது புனேயில் மயங்க் அகர்வால் 108 என ஒரே தொடரில் இந்திய துவக்க வீரர்கள் 4 சதங்கள் அடித்த நிகழ்வு, 4வது முறையாக நடந்தது.

முன்னதாக 1970-71ல் (விண்டீஸ் மண்ணில்), பின் சொந்தமண்ணில் 1978-78 (விண்டீஸ்), 2009-10ல் (இலங்கை) இதுபோல நடந்தது.

5

இந்திய அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால் 6 டெஸ்டில் பங்கேற்றார். இதில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய 6 போட்டிகளில் 5ல் அரைசதம் (76, 77, 5, 55, 215, 108) அல்லது அதற்கும் மேல் ரன்கள் எடுத்தார்.

500

நேற்று 3 ரன் எடுத்த போது இந்திய அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 6 டெஸ்டில் 605 ரன்களை எடுத்துள்ளார்.

600

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் வரிசையில் சச்சினை (553 ரன்) முந்தி, முதலிடம் பெற்றார் கோஹ்லி (600). தோனி (461) மூன்றாவதாக உள்ளார்.

9

தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு 'டாஸ்' அதிர்ஷ்டம் இல்லை போல. ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக நேற்று 9வது முறை 'டாஸ்' இழந்தது. முந்தைய 8 டெஸ்டில் 2 'டிரா' ஆனது. கடைசி 6 டெஸ்டில் தோற்றது.

'ஹெல்மெட்' அடி

அறிமுக வாய்ப்பு பெற்ற தென் ஆப்ரிக்காவின் நார்ட்ஜே, 'வேகத்தில்' மிரட்டினார். முதல் ஓவரில் கடைசி 3 பந்துகளை 149, 148, 147 கி.மீ., வேகத்தில் வீசினார். இவரது 2வது ஓவரின் 4வது பந்து 142 கி.மீ., வேகத்தில் வந்தது.

இதில் இருந்து தப்பிக்க சற்று குனிந்த மயங்க் அகர்வால் 'ஹெல்மெட்' மீது பலமாக தாக்கியது. சிறிது 'ரிலாக்ஸ்' ஆன பின், மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இவர், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார்.

சேவக்கிற்கு அடுத்து...

விசாகப்பட்டனம் (215, 7), புனே (108) என, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்டில் சதம் அடித்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் ஆனார் மயங்க் அகர்வால். இதற்கு முன் 2010ல் நாக்பூர் (109, 16), கோல்கட்டா (165) டெஸ்டில் சேவக் சதங்கள் விளாசினார்.

* தவிர தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்களில் அசார் (1996), சச்சின் (2010), சேவக்கிற்கு (2010) அடுத்த வீரர் ஆனார் மயங்க் அகர்வால்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN