சபாஷ் அஷ்வின்: ஐந்து விக்கெட் வீழ்த்தினார்

Indian News

Indian News

Author 2019-10-05 04:02:51

img

விசாகப்பட்டனம்: முதல் டெஸ்டில் எல்கர், குயின்டன் டி காக் சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 385/8 ரன்கள் குவித்தது. சுழலில் அசத்திய இந்தியாவின் அஷ்வின், 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 502/7 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் (27), பவுமா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

எல்கர் அபாரம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பவுமா (18) இஷாந்த் 'வேகத்தில்' வீழ்ந்தார். அடுத்து எல்கர், கேப்டன் டுபிளசி இணைந்தனர். ஜடேஜா வீசிய போட்டியின் 44வது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசினர் எல்கர். டுபிளசி இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் சுழலில் டுபிளசி (55) அவுட்டாகினார்.

74 ரன்னில் தப்பிய எல்கர், இந்திய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் சதம் விளாசினார். சர்வதேச அரங்கில் இது அவரது 12வது சதம். இவருடன் இணைந்த குயின்டன் டி காக், தன் பங்கிற்கு வேகமாக ரன்கள் சேர்த்தார்.

6வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்த போது 160 ரன் எடுத்த எல்கர், ஜடேஜா சுழலில் சிக்கினார். இந்திய மண்ணில் தென் ஆப்ரிக்க துவக்க வீரர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது (முதலிடம்- ஹால் 163 ரன், 2000).

அஷ்வின் நம்பிக்கை

மறுபக்கம் 79 ரன் எடுத்த போது, ஜடேஜா சுழலில் தப்பிய குயின்டன் டி காக், இந்தியாவுக்கு எதிராக முதல் சதம் எட்டினார். இது இவரது 5வது டெஸ்ட் சதம். இவர் 111 ரன் எடுத்த போது, அஷ்வின் போல்டாக்கினார். டி காக், அஷ்வினிடம் சிக்குவது 5வது முறையாக நடந்தது.

மீண்டும் மிரட்டிய அஷ்வின், பிலாண்டரை (0) வெளியேற்றினார். மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 385 ரன்கள் எடுத்து, 117 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 5, ஜடேஜா 2 விக்கெட் சாய்த்தனர்.

27

பிலாண்டரை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 27வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார். சொந்தமண்ணில் 21வது, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 5வது முறையாக இதுபோல சாதித்துள்ளார். கடந்த 2017, ஆக.,க்குப் பின் முதன் முறையாக அஷ்வின், டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பீல்டிங் சொதப்பல்

நேற்று இந்திய அணி வீரர்களின் பீல்டிங் சுமாராக இருந்தது. எல்கர் 74 ரன் எடுத்த போது, ஜடேஜா பந்தில் கொடுத்த 'கேட்சை' சகா தவற விட்டார். கடைசியில் இவர் 160 ரன்கள் எடுத்தார்.

* குயின்டன் டி காக் 79 ரன்னில் ஜடேஜா பந்தில் கொடுத்த 'கேட்சை' சகா, ரகானே நழுவவிட்டனர். அடுத்து 83 ரன்னிலும் தப்பிய இவர், 111 ரன் எடுத்தார்.

* முத்துச்சாமி ரன் கணக்கைத் துவக்கும் முன் அஷ்வின் பந்தில் கொடுத்த வாய்ப்பை, ரகானே வீணடித்தார்.

'செல்பி' ரசிகர்

சமீபகாலமாக போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வீரர்களுக்கு அன்பு தொல்லை தருவது அதிகரித்துள்ளது. நேற்று தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்த போது திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்தார். நேராக கோஹ்லியிடம் சென்று கைகொடுத்தார். பின் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார்.

10

இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில் சதம் எட்டிய 10வது தென் ஆப்ரிக்க வீரர் ஆனார் எல்கர். இதற்கு முன் ஆம்லா (4 சதம்), காலிஸ் (3), கிறிஸ்டன் (2) மற்றும் கல்லினன், ஆன்ட்ரூ ஹால், ஆன்ட்ரூ ஹட்சன், மெக்கன்சீ, பீட்டர்சன், டிவிலியர்ஸ், எல்கர் தலா 1 சதம் அடித்தனர்.

* கடந்த 2010ல் ஆல்விரோ பீட்டர்சனுக்கு அடுத்து இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் எட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஆனார் எல்கர்.

12

டெஸ்ட் அரங்கில் அறிமுக போட்டியில் இரு இன்னிங்சிலும் 'டக்' ஆன பின், அதிக சதங்கள் அடித்த வீரர்களில் எல்கர் (12) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் கிரஹாம் கூச் (20, இங்கிலாந்து), அட்டபட்டு (16, இலங்கை) உள்ளனர்.

16

இரு அணி துவக்க வீரர்கள் அதிக சிக்சர்கள் அடித்த போட்டியாக விசாகப்பட்டனம் டெஸ்ட் அமைந்தது. இதில் இந்தியாவின் ரோகித் (6), மயங்க் அகர்வால் (6) மற்றும் தென் ஆப்ரிக்காவின் எல்கர் (4) என மூவரும் இணைந்து 16 சிக்சர் அடித்தனர்.

இதற்கு முன் பாகிஸ்தான், நியூசிலாந்து மோதிய டெஸ்டில் ஹபீஸ் (பாக்.,), மெக்கல்லம் (நியூசி.,) இணைந்து 14 சிக்சர் அடித்துள்ளனர்.

* கிப்சிற்கு (6, எதிர், பாக்., 2003) அடுத்து ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கும் மேல் சிக்சர் அடித்த தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது துவக்க வீரர் ஆனார் எல்கர்.

164

ஆசிய மண்ணில் 6 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை எல்கர், குயின்டன் டி காக்கிற்கு (164) கிடைத்தது. இதற்கு முன் ஹால், டி புருய்ன் ஜோடி கான்பூர் டெஸ்டில் (2004) 144 ரன்கள் எடுத்திருந்தது.

346

தென் ஆப்ரிக்க அணி நேற்று ஒரே நாளில் மட்டும் 346 ரன்கள் எடுத்தது. இந்திய மண்ணில் ஒரே நாளில் எதிரணி எடுக்கப்பட்ட 6வது அதிகபட்ச ஸ்கோர் இது. முதல் இடத்தில் விண்டீஸ் (374, டில்லி, 1974-75) உள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD