சாகிப்புக்கு தடை: ஐ.சி.சி., நடவடிக்கை

Indian News

Indian News

Author 2019-10-30 01:42:21

img

வங்கதேச அணி கேப்டனாக இருந்தவர் சாகிப் அல் ஹசன் 32. உலகத் தரவரிசையில் ஒருநாள் அரங்கில் 'நம்பர்-1', 'டுவென்டி-20'ல் 'நம்பர்-2', டெஸ்டில் 'நம்பர்-3' ஆல் ரவுண்டராக உள்ளார். கடந்த வாரம் சம்பள உயர்வு கேட்டு இவரது தலைமையில், வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) எதிராக வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

பின் பிரச்னை பேசி தீர்க்கப்பட்டது. அதேநேரம் விதிகளை மீறி தொலைபேசி நிறுவனத்துடன் சாகிப் ஒப்பந்தம் செய்தது ஏன் என விளக்கம் தருமாறு பி.சி.பி., கடிதம் அனுப்பியது. ஒருவேளை இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், சாகிப் இந்திய தொடரில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டது.

இதற்கிடையே புதிய திருப்பமாக, கடந்த இரு ஆண்டுக்கு முன் சர்வதேச போட்டியில் 'பிக்சிங்' செய்ய புக்கி ஒருவர், சாகிப்பை அணுகிய விஷயம் தற்போது வெளியானது.

புக்கிகள் அணுகியதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட சாகிப், அப்போது யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால் பி.சி.பி., சார்பில் விசாரிக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தகவல் தெரிவிக்கப்பட்டது. 'பிக்சிங்' புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்ட ஐ.சி.சி., முறைப்படி தகவல் தெரிவிக்காத சாகிப்பிடம், கடந்த ஜனவரி மற்றும் ஆகஸ்டில் விசாரணை நடத்தியது.

இதில் சாகிப் தனது தவறை ஒப்புக் கொண்டதால் அதிகபட்ச தண்டனையான, ஐந்து ஆண்டுகள் தடையில் இருந்து தப்பினார். இருப்பினும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதில் ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தடை. 12 மாதம் தடை உறுதி என்பதால் வரும் 2020, அக். 29க்குப் பின் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

சோகமாக உள்ளது

ஐ.சி.சி., ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தில் சாகிப் கூறுகையில்,''நான் மிகவும் விரும்பிய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது மிகவும் சோகமானது. அதேநேரம் 'பிக்சிங்' குறித்த விஷயங்களை சொல்லாமல் விட்டது எனது தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

'பிக்சிங்' நடந்ததா

கடந்த 2017ல் வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் 'பிக்சிங்' சம்பந்தமாக தீபக் அகர்வால் என்ற புக்கி, சாகிப்பை அணுகினார்.

* 2018, ஜன.,ல் வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு தொடரில் மீண்டும் சாகிப்பை தொடர்பு கொண்டார்.

* 2018, ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது, ஏப். 26ல் பஞ்சாப் போட்டி குறித்த தகவல்கள் தருமாறு அகர்வால், சாகிப்பிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பான குறுந்தகவல்களை சாகிப் அழித்து விட்டார். தவிர யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இப்படிச் செய்யலாமா

ஐ.சி.சி., பொதுமேலாளர் அலெக் மார்ஷல் கூறுகையில்,''சர்வதேச அரங்கில் சாகிப் அனுபவம் உள்ள வீரர். சூதாட்ட தடுப்பு விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். விதிகள் குறித்து நன்கு தெரிந்தவர். பிக்சிங் குறித்த தகவல்களை கட்டாயம் தெரிவித்து இருக்க வேண்டும்,'' என்றார்.

எப்போது களமிறங்கலாம்

சாகிப் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தடையில், ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்படுகிறது. முதல் ஆண்டில் மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளம் வீரர்களுக்கு 'அட்வைஸ்' செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். இதைச் சரியாகச் செய்தால், 2வது ஆண்டு தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, அக். 29, 2020ல் களமிறங்கலாம்.

* இதனால் வரும் 2020 ஐ.பி.எல்., தொடர் மற்றும் 'டுவென்டி-20' உலக கோப்பை (2020, அக். 18-நவ. 25) தொடரில் பங்கேற்க முடியாது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN