சென்னை அணி ஏமாற்றம் * கோல்கட்டா அணி கலக்கல்

Indian News

Indian News

Author 2019-10-31 04:41:04

img

சென்னை: ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை அணியின் சோகம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவிடம் 0-1 என தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.,) ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. பெங்களூரு, மும்பை, கேரளா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. நேற்று சென்னை நேரு மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் சென்னை வீரர் டிராகோஸ் பந்தை சக வீரர் எட்வினிடம் 'பாஸ்' செய்தார். இதை கோல் போஸ்ட் நோக்கி அடிக்க, அங்கிருந்த சென்னை அணியின் முன்கள வீரர் நெரிஜஸ் தலையால் முட்டினார்.

பந்து கோல் போஸ்ட் மேலாக செல்ல, வாய்ப்பு வீணானது. முதல் பாதி, 0-0 என முடிந்தது.

இரண்டாவது பாதியில் துவங்கிய 3 வது நிமிடத்தில் கோல்கட்டா அணியின் டேவிட் வில்லியம்ஸ் (48வது), ஒரு கோல் அடித்தார். 60 வது நிமிடம் சென்னை வீரர் எட்வின் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வலது புறமாக சென்றது. 71வது நிமிடத்தில் ரபேல், 72வது நிமிடம் ஆன்ட்ரூ என அடுத்தடுத்து கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சென்னை வீரர்கள் வீணடிக்க, ரசிகர்கள் நொந்து போயினர்.

போட்டியின் கடைசி நிமிடத்திலும் சென்னை வீரர்கள் சொதப்பினர். பந்துகளை பெரும்பாலும் கட்டுக்குள் (61 சதவீதம்) வைத்திருந்து, 18 முறை முயற்சித்தும் ஒரு கோல் கூட முடியாத சோகத்தில் இருந்த சென்னை அணி, முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

கோல் எங்கே

சென்னை அணியின் சோகம் தீரவில்லை. கடந்த சீசனில் 18 போட்டியில் 2ல் மட்டும் வென்ற இந்த அணி, இம்முறை 1 'டிரா', 2 தோல்வி அடைந்தது. தவிர இந்த மூன்று போட்டியில் இன்னும் ஒரு கோல் கூட அடிக்காதது அதிர்ச்சி தான்.

1000

ஐ.எஸ்.எல்., தொடர் கடந்த 2014ல் துவங்கப்பட்டது. இத்தொடரில் கோல்கட்டா அணியின் பிக்ரு, முதல் கோல் அடித்தார். தற்போது ஆறாவது தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டா வீரர் டேவிட் வில்லியம்ஸ், ஐ.எஸ்.எல்., அரங்கின் 1000வது கோல் அடித்தார். முதல் மற்றும் 1000 வது கோல்களை கோல்கட்டா வீரர்கள் அடித்தது 'ஸ்பெஷல்' தான்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD