தமிழக அணி 'ஹாட்ரிக்' வெற்றி
ஜெய்ப்பூர்: பீகார் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் பாபா அபராஜித், விஜய் சங்கர் அரைசதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி 18வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பீகார் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பீகார் அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.
பீகார் அணிக்கு ரஹ்மதுல்லா (38), கேஷவ் குமார் (35) ஆறுதல் தந்தனர். கேப்டன் பாபுல் குமார் (110) சதம் கடந்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் (37), நாராயண் ஜெகதீசன் (24) நல்ல துவக்கம் தந்தனர். ஹரி நிஷாந்த் (9) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பாபா அபராஜித், விஜய் சங்கர் அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டனர்.
தமிழக அணி 46.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித் (52), விஜய் சங்கர் (91) அவுட்டாகாமல் இருந்தனர். முதலிரண்டு போட்டியில் ராஜஸ்தான், சர்வீசஸ் அணிகளை வீழ்த்திய தமிழக அணி, தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது.
ராகுல் சதம்
பெங்களூருவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் கர்நாடகா, கேரளா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கேரள அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. லோகேஷ் ராகுல் (131), கேப்டன் மணிஷ் பாண்டே (50) கைகொடுக்க கர்நாடகா அணி 49.5 ஓவரில், 294 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சவாலான இலக்கை விரட்டிய கேரளா அணிக்கு விஷ்ணு வினோத் (104), சஞ்சு சாம்சன் (67) நம்பிக்கை தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற கேரளா அணி 46.4 ஓவரில், 234 ரன்களுக்கு சுருண்டு 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம் ஆலுரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மும்பை, சட்டீஸ்கர் அணிகள் மோதின. மும்பை அணிக்கு ஆதித்யா தாரே (90), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (50), சூர்யகுமார் யாதவ் (81) கைகொடுக்க, 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய சட்டீஸ்கர் அணியின் அமன்தீப் காரே (117*) சதம் கடந்து அசத்த, 49.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.