தலைநகரில் தடுமாறிய இந்தியா: வங்கத்துக்கு 'முதல்' வெற்றி

Indian News

Indian News

Author 2019-11-04 07:40:22

img

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ஷிவம் துபே, வங்கதேச அணியில் முகமது நைம் அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ரோகித் ஏமாற்றம்: இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ஷபியுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித் (9), கடைசி பந்தில் அவுட்டானார். இரண்டாவது ஓவரை துல்லியமாக வீசிய அல்-அமின் ஹொசைன் 2 ரன் மட்டுமே வழங்கினார்.

அடுத்து வந்த லோகேஷ் ராகுல் (15) நிலைக்கவில்லை. அமினுல் இஸ்லாம் பந்தில் 2 சிக்சர் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், சவுமியா சர்கார் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவர், 13 பந்தில் 22 ரன் எடுத்து அவுட்டானார்.

தவான் ஆறுதல்: மறுமுனையில் நிதானமாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான், மகமதுல்லா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தேவையில்லாமல் 2வது ரன்னுக்கு ஆசைப்பட்ட தவான் (41) 'ரன்-அவுட்' ஆனார். அறிமுக வீரர் ஷிவம் துபே ஒரு ரன்னில் நடையை கட்டினார். அபிப் ஹொசைன், முஸ்தபிஜுர் ரஹ்மான், அல்-அமின் ஹொசைன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரிஷாப் பன்ட் (27) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், ஷபியுல் இஸ்லாம், அல்-அமித் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். அல்-அமின் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை குர்னால் பாண்ட்யா சிக்சருக்கு அனுப்பினார்.

இந்திய அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் (14), குர்னால் பாண்ட்யா (15) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ஷபியுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

முஷ்பிகுர் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (7) ஏமாற்றினார். முகமது நைம் (26) ஓரளவு கைகொடுத்தார். வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்ட்யா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த சவுமியா சர்கார் (39) நம்பிக்கை தந்தார். மறுமுனையில் அசத்திய முஷ்பிகுர், கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார்.

டில்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு, இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய முதல் 'டுவென்டி-20' போட்டிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காற்று மாசுபாடு எச்சரிக்கையும் மீறி கிரிக்கெட் மோகம் காரணமாக போட்டியை காண 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதிக அளவில் மாணவர்களும் வந்திருந்தனர். வங்கதேச வீரர்கள் போட்டியில் 'மாஸ்க்' அணியாமல் விளையாடினர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில், 5வது முறையாக, ஒரு போட்டியில், 5 இந்திய இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடினர். ஏற்கனவே இலங்கை (2009, இடம்: கொழும்பு), நியூசிலாந்து (2009, இடம்: வெலிங்டன்), விண்டீஸ் (2019, இடம்: லாடர்ஹில்), தென் ஆப்ரிக்கா (2019, இடம்: பெங்களூரு) அணிகளுக்கு எதிராக இப்படி 'பேட்டிங்' செய்திருந்தனர்.

சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிராக முதல் தோல்வியை பெற்றது. இதுவரை இவ்விரு அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 8, வங்கதேசம் ஒரு போட்டியில் வென்றன.

யுவேந்திர சகால் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தை வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் துாக்கி அடித்தார். பவுண்டரி எல்லை அருகே நின்றிருந்த இந்தியாவின் குர்னால் பாண்ட்யா பந்தை நழுவவிட்டார். அப்போது 38 ரன் எடுத்திருந்த ரஹிம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய ரசிகர்களின் வில்லன் ஆனர் குர்னால்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD