தேர்வாளர்கள் மீது யுவராஜ் பாய்ச்சல்
மும்பை: ''நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப திட்டமிட்டு அணியை தேர்வு செய்ய வேண்டும். பிரசாத் தலைமையிலான குழுவை மாற்ற வேண்டும்,'' என யுவராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணி முன்னாள் 'ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங் 37. தற்போதுள்ள இந்திய அணித் தேர்வுக்குழு குறித்து இவர் கூறியது:
இந்திய அணி தேர்வாளர்கள் பணி எளிதானது அல்ல. இருப்பினும் இப்போதுள்ளவர்களுக்குப் பதில் சிறந்த தேர்வுக்குழு தேவை. 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் போதே, வேறு 15 பேர் கொண்ட அணிக்கு என்ன நடக்கும் என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். இது சற்று கடினமானது தான். ஆனால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இப்போதுள்ள தேர்வாளர்கள் யோசிக்கவில்லை என்பது தான் எனது கருத்து.
அடுத்த ஆண்டு 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் வீரர்களை அணியில் சேர்ப்பது, நீக்குவது போன்ற வேலைகளில் தேர்வாளர்கள் ஈடுபடக் கூடாது. போதுவாக, வீரர்களின் சாதக விஷயங்கள் குறித்து பேசி, அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். ஏனெனில் தவறுகள் குறித்து பேசும் போது அந்த அணி சிறப்பாக செயல்பட முடியாது. விஷயங்கள் தவறாக நடக்கும் போது, உற்சாகமாக பேசி செயல்படத் துாண்டும் போது தான் உண்மையான திறமை வெளிப்படும். ஆனால் இக்கட்டான நேரங்களில் எல்லோரும் மோசமாக பேசுகின்றனர். இப்போதுள்ள நிலையில் இந்திய அணிக்கு சிறந்த தேர்வாளர்கள் தான் தேவை.
பயம் வேண்டாம்
மற்ற நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் துவங்க வேண்டும். ஏனெனில் வீரர்களை பொறுத்தவரையில் அதிக கிரிக்கெட் விளையாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஒருவேளை ஏற்க மறுத்தால் அணியில் இருந்து நீக்கி விடுவர் என்ற நெருக்கடியுடன் போட்டிகளில் பங்கேற்கின்றனர். சோர்வடைந்தால் அல்லது காயமடைந்தாலும் விளையாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், மனதளவில் சோர்வடைந்த போது, அணியில் இருந்து விலக அனுமதித்தனர். இந்தியாவில் அப்படி இல்லை, எங்கே அணியில் இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் வீரர்களுக்கு ஏற்படுகிறது.
இதனால் வீரர்கள் சங்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. இதற்குத் தகுந்து நிர்வாகம் மற்றும் வீரர்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கும் கங்குலி தலைவராக கிடைத்துள்ளார். இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது. வீரர்கள் கூறுவதை கண்டு கொள்ளாமல் அவர்களாக முடிவெடுப்பர். கங்குலி அப்படியல்ல, வீரர்களுக்கு என்ன வேண்டும் என கேட்பார்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.