நாக்பூரில் 'பைனல்' * இந்தியா, வங்கதேசம் பலப்பரீட்சை

Indian News

Indian News

Author 2019-11-10 03:42:49

img

நாக்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் சாதித்து, இந்திய அணி கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. பைனல் போன்ற மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் கோஹ்லி உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்பட்டு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பைக்கு இளம் வீரர்களை கண்டறிய இத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

இரு போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை புதிதாக யாரும் பிரகாசிக்கவில்லை.

ஷிகர் தவான் தொடர்ந்து தடுமாற, கேப்டன் ரோகித் சர்மா வழக்கமான பாணியில் ரன் மழை பொழிகிறார்.

'மிடில் ஆர்டரில்' கிடைத்த வாய்ப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தந்தார். லோகேஷ் ராகுல், ஷிவம் துபே ஏமாற்றினர்.

ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பிங் பணியில் இன்று தவறு செய்யாமல் பொறுப்பாக செயல்படுவார் என நம்பலாம்.

சகால் நம்பிக்கை

வேகப்பந்து வீச்சில் கலீல் அகமது ரன்களை வாரி வழங்குகிறார். இவருக்குப் பதில் ஷர்துல் தாகூர் இடம் பெற வாய்ப்புள்ளது. தீபக் சகார் ஆறுதல் தர, சகால் விக்கெட் வீழ்த்தும் பணியை துவக்கி இருப்பது நம்பிக்கை தருகிறது.

'டுவென்டி-20' அணியில் 'ரெகுலராக' இடம் பெறும் குர்னால் பாண்ட்யா, கடைசி 5 போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. குல்தீப்புக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட வாஷிங்டன் சுந்தர், நெருக்கடி தந்தாலும், சகால் போல விக்கெட் சாய்க்கவில்லை.

வெற்றிக்கு முயற்சி

வங்கதேச அணிக்கு முகமது நயீம், லிட்டன் தாஸ் நல்ல துவக்கம் தருகின்றனர்.

சவுமியா சர்க்கார், கேப்டன் மகமதுல்லாவுடன், கடந்த முறை ஏமாற்றிய முஷ்பிகுர் ரகிம் எழுச்சி பெற முயற்சிக்கலாம்.

இவர்களுக்கு பவுலிங்கில் முஸ்தபிஜுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் பவுலிங்கில் கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

1

நாக்பூரில் இந்திய அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகளில் மோதின. இதில் இலங்கை (2009), நியூசிலாந்து (2016) அணிகளுக்கு எதிராக தோற்ற இந்தியா, 2017ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.

சாதகம் எது

நாக்பூர் மைதானத்தில் நடந்த 11 போட்டிகளில் 3ல் மட்டும் 'சேஸ்' செய்த அணிகள் வென்றன. மற்ற 8 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றன. இன்று 'டாஸ்' வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

மழை வருமா

மூன்றாவது 'டுவென்டி-20' நடக்கும் நாக்பூரில் இன்று மழைக்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. போட்டி முழுமையாக நடக்கும்.

வீரர்களுடன் சந்திப்பு

இந்திய விமானப்படையின் 87 வது ஆண்டு விழாவை அடுத்து இன்று 'ஏர் பெஸ்ட் 2019' என்ற நிகழ்ச்சி நாக்பூரில் நடத்தப்படுகிறது. இளைஞர்கள் விமானப்படையில் இணைவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று மதியம் முதல் 1000 மணி நேரம் ஒத்திகை நிகழ்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள் நேற்று நாக்பூர் கிரிக்கெட் மைதானம் வந்து ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்து மகிழ்ந்தனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN