பிங்க் பந்தில் விளையாட சச்சின் தரும் டிப்ஸ்!

srini

srini

Author 2019-11-03 00:38:21

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் பிங்க் நிற பந்தை வைத்து விளையாடும் பகலிரவு டெஸ்ட் போட்டி இருப்பதால் அதிக எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.

imgThird party image reference


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தைக் குறையவிடாமல் பார்த்துக்கொள்ளவும் இந்த பகலிரவு ஆட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

உலகின் மற்ற நாடுகளில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் முதல் முறையாக இப்போதுதான் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அரங்கேறுகின்றன. எனவே வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியினருக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முக்கியத்துவமும் எதிர்பார்ப்பும் வாய்ந்ததாக உள்ளது.

நவம்பர் 22ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சிக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் பேசுகையில், “இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இப்போட்டிகளில் மைதானத்தின் ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கும். பந்தின் ஈரப்பதம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிங்க் நிறப் பந்துகளை வைத்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்யும்போது வெவ்வேறு நிலையில் உள்ள பந்துகளை வைத்து பயிற்சி செய்ய வேண்டும். 20 ஓவர்கள் வரை ஆடப்பட்ட பந்து, 50 ஓவர்கள் வரை ஆடப்பட்ட பந்து, 80 ஓவர்கள் வரை ஆடப்பட்ட பந்து என வெவ்வேறு நிலைகளில் உள்ள பந்துகளை அதன் ஈரப்பதத்துக்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் விளையாடி பயிற்சி செய்துகொள்ள வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மாலை நேரங்களில் வந்து பார்த்து ரசிக்க முடியும் என்பதால் பகலிரவு டெஸ்ட் போட்டியை வரவேற்பதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு ஈரப்பதம் முக்கியக் காரணியாக இருக்கும் என்பதால் வீரர்கள் கவனமுடன் ஆட்டத்தைக் கையாள வேண்டும் எனவும் சச்சின் எச்சரிக்கை செய்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN