புரியாத புதிரா புனே: ஆடுகளம் யாருக்கு சாதகம்
புனே: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் துவங்குகிறது. இங்குள்ள ஆடுகளத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நாளை புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் துவங்குகிறது. இந்த மைதானத்தை பொறுத்தவரையில் கணிக்க முடியாததாக உள்ளது.
முதல் தர போட்டிகளில் இந்த களம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.
திடீர் மாற்றம்
ஒருநாள் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ரன் குவிப்பு 280 ரன்னாக உள்ளது. டெஸ்ட் என்று வரும் போது மட்டும் அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. கடந்த 2017ல் இங்கு முதல் டெஸ்ட் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய (260, 285) 'சுழல்' வீரர் ஸ்டீவ் ஓ கீபே, இரு இன்னிங்சிலும் 70 ரன்னுக்கு 12 விக்கெட் சாய்க்க, இந்தியா (105, 107), 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்திய தரப்பில் லோகேஷ் ராகுல் மட்டும் (64, 10) ஆறுதல் தந்தார்.
கேப்டன் கோஹ்லி (0, 13), புஜாரா (6, 31), ரகானே (13, 18) சொதப்பினர். கேப்டன் கோஹ்லி தலைமையில் இந்திய அணி, சொந்தமண்ணில் தோற்ற ஒரே இடமாக மாறியது புனே. மூன்று நாளில் போட்டி முடிந்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆடுகளம் மோசம் என்றது.
ரசிகர்கள் நம்பிக்கை
தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இங்கு இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆஸ்திரேலியாவைப் போல தென் ஆப்ரிக்காவும் இந்தியாவுக்கு அதிர்ச்சி தர திட்டமிட்டாலும், அது அவ்வளவு எளிதல்ல. இதற்கு டுபிளசி அணியினர் முதலில் பேட்டிங் செய்து, அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே இந்தியாவுக்கு நெருக்கடி தர முடியும்.
1
கடந்த 2013 ஜனவரிக்குப் பின் இந்திய அணி சொந்தமண்ணில் 30 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 24ல் வென்றது. 5 டெஸ்ட் 'டிரா' ஆகின. புனேயில் 2017ல் நடந்த டெஸ்டில் மட்டும் இந்தியா தோற்றது.