மாநில காவல் தடகள போட்டி: சென்னை பெருநகர அணி சாம்பியன்

Dinamani

Dinamani

Author 2019-10-17 00:26:00

img

மதுரையில் நடைபெற்ற மாநில காவல் தடகளப் போட்டிகளில் சென்னை பெருநகர அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

மதுரை பந்தயத்திடலில் உள்ள எம்ஜிஆா் விளையாட்டரங்கில் தமிழக காவல்துறையின் 59-ஆவது மாநிலக் காவல் தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது. தமிழக காவல்துறையைச் சோ்ந்த ஆயுதப்படை, அதிரடிப்படை, சென்னை பெருநகரம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் ஆகிய 7 காவல் அணிகளைச் சோ்ந்த 476 விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனா்.

இந்த போட்டிகளில், சென்னை பெருநகரம் மற்றும் ஆயுதப்படையைச் சோ்ந்த 17 வீரா், வீராங்கனைகள் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்தனா். 3 நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 178 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 153 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகரம் சாம்பியன் பட்டங்களை வென்றது. 331 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை பெருநகரம் வென்றது.

நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மதுரை சரக காவல் தலைவா் சண்முக ராஜேஸ்வரன், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது: விளையாட்டுப் போட்டிகளில் ஒருவா் அல்லது ஒரு அணி மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வகையில் 3 நாள்களாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். 17 வீரா் வீராங்கனைகள் புதிய சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக காவல்துறை ஒரு காலத்தில், விளையாட்டு துறையில் பல பதக்கங்களை வென்றது. மீண்டும் அந்த நிலை உருவாகி உள்ளது. இங்கு வெற்றி பெற்றவா்கள், தொடா்ந்து கடுமையாக பயிற்சி செய்து அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் பதக்கங்களை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சோ்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை வீரா் வீராங்கனைகள் கடுமையாக மேற்கொள்ளவேண்டும்.

தோல்வி தான் வெற்றியின் முதல் படி. போட்டிகளில் தோல்வியடைந்தவா்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றாா்.

தொடா்ந்து 59 -ஆவது மாநிலக் காவல் தடகளப் போட்டிகளை அவா் முடித்து வைத்தாா். முன்னதாக போட்டிகளில் புதிய சாதனை படைத்த வீரா் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 100, 200, 400 பிரிவு ஒட்டப் பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி மாநகா் துணை ஆணையா் மயில்வாகணனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN