மேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-12 10:04:20

img

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

img

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி, சதம் அடித்தார். இது இவருக்கு 26 வது டெஸ்ட் சதம். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமும் இதுதான். இந்தச் சதத்தின் மூலம் விராட் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி அடிக்கும் 19ஆவது சதம் இது. எனவே டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த இடத்தை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் பகிர்ந்துள்ளார். ரிக்கி பாண்டிங்கும் ஆஸ்திரேலிய கேப்டனாக 19 சதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 25 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.

img

அதேபோல டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர் அடித்திருந்த ரன்களை கடந்து விராட் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் 26ஆவது சதத்தை 138ஆவது இன்னிங்ஸில் கடந்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின்(144 இன்னிங்ஸ்) சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இரண்டாம் நாள் உணவு இடவேளைக்குப் பின் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 125 ரன்களுடனும், ஜடேஜா 1ரன் உடனும் களத்தில் உள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN