ரோகித் '100' *வெல்லுமா இந்திய அணி
ராஜ்கோட்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. இது, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் 100வது போட்டி. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் சற்றும் எதிர்பாராத வகையில் சாதித்த வங்கதேச அணி, இந்திய மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
தற்போது தொடரில் இந்தியா 0-1 என பின் தங்கியுள்ள நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடக்கின்றது.
திடீர் சொதப்பல்
டெஸ்ட், ஒருநாள் அரங்கில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி வீரர்கள் 'டுவென்டி-20' என்றால், சொதப்புகின்றனர்.
பேட்டிங் முக்கியம்
கோஹ்லி, பும்ரா உள்ளிட்ட சில 'சீனியர்' வீரர்கள் ஓய்வில் உள்ள நிலையில் இளம் வீரர்கள் தங்களை நிரூபித்தால் நல்லது. டில்லியில் ஏமாற்றிய கேப்டன் ரோகித், நல்ல துவக்கம் தர வேண்டும். இவருக்கு ஷிகர் தவான் கைகொடுத்தால் பெரிய ஸ்கோர் பெறலாம். 'மிடில் ஆர்டரில்' லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
டெஸ்ட் அணியில் நீக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார். இவருக்குப் பதில் சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என நம்பப்படுகிறது.
பவுலிங் முக்கியம்
பவுலிங்கை பொறுத்தவரையில் 19வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடிக்கவிட்ட கலீல் அகமது நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் வர காத்திருக்கிறார். இவருடன் தீபக் சகார் சேர்ந்து மிரட்டலாம். 'ஆல் ரவுண்டர்கள்' ஷிவம் துபே, குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் 'சுழலில்' ரன்களை கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. விக்கெட் வீழ்த்த வேண்டும்.
'திரில்' வெற்றி
சம்பள பிரச்னை, தமிம் இக்பால் இல்லாதது, சாகிப் அல் ஹசன் தடை என பல சிக்கல்களுடன் வந்த வங்கதேச அணிக்கு டில்லியில் கிடைத்த வெற்றி பெரும் உற்சாகம் தந்துள்ளது. முஷ்பிகுர் ரகிம், மகமதுல்லா, சவுமியா சர்கார் மீண்டும் சாதிக்க முயற்சிக்கலாம். பவுலிங்கில் அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தபிஜுர் இந்தியாவுக்கு நெருக்கடி தர காத்திருக்கின்றனர்.
முதல் வீரர்
நுாறாவது 'டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோகித் சர்மா. தற்போது 99 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், அப்ரிதியுடன் (99, பாக்.,) இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் (111 போட்டி) முதலிடத்தில் உள்ளார்.
புயல் பாதிப்பா
கடந்த சில நாட்களாக குஜராத் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள 'மஹா' புயல், இன்று கரையை கடப்பதால் ராஜ்கோட்டில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஆடுகளம் முழுமையாக தார்ப்பாயினால் மூடப்பட்டுள்ளது. போட்டி இரவில் நடப்பதால் மழை குறைந்து மேகமூட்டமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1
ராஜ்கோட்டில் இந்தியா இரண்டு 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றது. 2013ல் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா, 2017ல் நியூசிலாந்திடம் தோற்றது.
யாருக்கு சாதகம்
கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ராஜ்கோட் ஆடுகளம் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமானது. சில நேரத்தில் பவுலிங்கிற்கும் கைகொடுக்கும். இன்று ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பவுலிங் கூட்டணி முடிவு செய்யப்படும். டில்லியை விட சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்,'' என்றார்.