விஜய் ஹசாரே டிராபி: பைனலுக்கு முன்னேறியது தமிழகம்

Indian News

Indian News

Author 2019-10-24 06:59:44

img

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில், குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். குஜராத் அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. துருவ் ராவல் அதிகபட்சமாக 40 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அக்சர் பட்டேல் 37, பார்கவ் மெராய் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

தொடக்க வீரரும் கேப்டனுமான பார்திவ் பட்டேல் 13 ரன்னில் வெளியேறினார். சிந்தன் கஜா 24 ரன், ஜெய்வீர் பார்மர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தமிழக பந்துவீச்சில் முகமது 6 ஓவரில் 23 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆர்.அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், எம்.அஷ்வின், அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 40 ஓவரில் 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. அபினவ் முகுந்த், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். முரளி விஜய் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அபராஜித் 6 ரன்னில் வெளியேறினார். தமிழகம் 8.1 ஓவரில் 25 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அபினவ் முகுந்த் - கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 45 ரன் சேர்த்தது. முகுந்த் 32 ரன் எடுத்து கரண் பட்டேல் பந்துவீச்சில் பார்மர் வசம் பிடிபட்டார். விஜய் ஷங்கர் 6 ரன், தினேஷ் கார்த்திக் 47 ரன் எடுத்து (47 பந்து, 5 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டமிழக, தமிழகம் 24.2 ஓவரில் 96 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

எனினும், வாஷிங்டன் சுந்தர் - ஷாருக் கான் ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி வெற்றியை வசப்படுத்தியது. தமிழகம் 39 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 27 ரன், ஷாருக் கான் 56 ரன்னுடன் (46 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா பந்துவீச்சில் கஜா, அக்சர் பட்டேல், கரண் பட்டேல், பியுஷ் சாவ்லா, பார்மர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை காலை 9.00 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடகா மோதுகின்றன.

கர்நாடகா அபார வெற்றி
விஜய் ஹசாரே டிராபியில், பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் கர்நாடகா - சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, சத்தீஸ்கர் 49.4 ஓவரில் 223 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அமன்தீப் காரே அதிகபட்சமாக 78 ரன் (102 பந்து, 4 பவுண்டரி), சுமித் ரூய்கர் 40, அஜய் மண்டல் 26, கேப்டன் ஹர்பிரீத் சிங் 25, அஷுதோஷ் சிங் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கர்நாடகா பந்துவீச்சில் வி.கவுஷிக் 4, மிதுன், கவுதம், துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 40 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தேவ்தத் படிக்கல் 92 ரன் (98 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அஜய் மண்டல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கே.எல்.ராகுல் 88 ரன் (111 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), மயாங்க் அகர்வால் 47 ரன்னுடன் (33 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN