2வது டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்தியா

Makkalkural

Makkalkural

Author 2019-10-14 12:57:35

img

புனே, அக். 13–
புனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ‘பாலோ ஆன்’ ஆன தென் ஆப்பிரிக்க அணி 142 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது.
இந்தியா–தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா அணி 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் (254 ரன்) அடித்து சாதனை படைத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி நேற்று 105.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர் கேஷவ் மகராஜ் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. 326 ரன் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு ‘பாலோ ஆன்’ வழங்கியது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மர்கிராமும், டீன் எல்கரும் களமிறங்கினர்.
ஆட்டத்தின் 2வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் மர்கிராம், இஷாந்த் சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த டு புருயின் 8 ரன்னில் உமேஷ் பந்தில் சாஹாவிடம் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து டு பிளசிஸ் 5 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய எல்கர் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
46 ஓவர்கள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து திணறி வருகிறது. இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு பிரகாசமாக உள்ளது.READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN